நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங் கவலையறச் செய்து -மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- மகாகவிஞன்.



Sunday, January 3, 2010

விபூதி இயல்

விபூதி இயல்

1. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?
விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.

2. விபூதியாவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின் பெயர்: பசிதம், பசுமம், க்ஷ¡ரம், இர¨க்ஷ.

3. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

4. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?
புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம். வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?
சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.

10. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?
சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

11. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?
சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.

12. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?
ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.

14. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

15. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?
கொண்டு வந்தவர் தீ¨க்ஷ முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.

16. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)

17. திரிபுண்டரமாவது யாது?
வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.

18. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.

19. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?
ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.

20. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?
தி¨க்ஷயுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும். தீ¨க்ஷ இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.

21. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?
ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.
திருச்சிற்றம்பலம்

சிவாலய தரிசன விதி

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

சிவாலய தரிசன விதி

சைவசமயிகள் யாவருக்கும்
எளிதின் உபயோகமாகும் பொருட்டு

யாழ்ப்பாணம் கொக்குவில்
இ. சி. இரகுநாதையரால்
சோதிடப்பிரகாசயந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.
விகிர்தி ஆண்டு ஆவணி மாதம்
மூன்றாம் பதிப்பு
1950
----------------------------------------------------------
கணபதி துணை
சிவாலய தரிசன விதி


அநாதி முத்த சித்துருவாகிய முதற்கடவுள் சிவபெருமானே என்று துணிந்து, அவர் அருளிச் செய்த வேதாமகங்களிலே விதித்தபடி, தங்கள் தங்கள் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்கும் ஏற்ப அவரை மெய்யன்போடு வழிபடுவோர் சைவசமயிகள் என்று சொல்லப்படுவர்.


கருணாநிதியான சிவபெருமான், புறத்தே திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனியும் தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளோர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.


சிவத்திரவியங் கவராமை, கொல்லாமை, புலாலுண்ணாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, பிறர்மனை நயவாமை, வரைவின்மகளிர் நயவாமை, இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய் தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகள் இவ் வழிபாட்டுக்கு அங்கங்களாம்; இவ்வழிபாடு அங்கியாம். ஆதலா, இந்நன்மைகள் இல்லாது செய்யும் வழிபாடு சிறிதும் பயன்படாதென்பது துணிபு.


இவ்வழிபாடு செய்யும் சைவசமயிகளே தரிக்கற்பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதியும் உருத்திராக்ஷமுமாம். இவைகளைத் தரியாது செய்யும் சிவ புண்ணியங்கள் சிறிதும் பயன்படாவாம்.


திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர்பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்புலிங்கம் தானே தோன்றியது. காணலிங்கம் விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிகலிங்கம் விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிடலிங்கம் இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே தாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கம் மனுடராலே தாபிக்கப்பட்டது. மானுடலிங்கத்தின் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்புலிங்கம்.


திருக்கோயொலிலே கர்ப்பக்கிருகத்தினுள்ளே சிவலிங்கப்பெருமானைச் சூழ்ந்தவிடம் முதலாவரணம். அதற்கப்பாலுள்ளது இரண்டாமாவரணம். அதற்கப்பாலுள்ளது மூன்றாமாவரணம். அதற்கப்பாலுள்ளது நான்காமாவரணம். அதற்கப்பாலுள்ளது ஐந்தாமாவரணம். அதற்கப்பால் ஊரின்புறம் ஆறாமாவரணம். பிரதக்ஷிணபலம் முதலாவரணத்தினும் பார்க்க இரண்டாமாவரணத்தும், இரண்டாமாவரணத்தினும் பார்க்க மூன்றாமாவரணத்தும், மூன்றாமாவரணத்தினும் பார்க்க நான்காமாவரணத்தும், நான்காமாவரணத்தினும் பார்க்க ஐந்தாமாவரணத்தும், ஐந்தாமாவணத்தினும் பார்க்க ஆறாமாவரணத்தும் அதிகமாம்.
   படைப்புக்காலத்திலே சதாசிவமூர்த்தியுடைய ஐந்து முகங்களினின்றும் தோன்றிய காசிபர் முதலிய ஐந்திருடிகளுடைய கோத்திரத்திலே பிறந்த ஆதிசைவராகிய சிவப்பிராமணர்களுள், மனக்குற்றங்களும் உடற்குற்றங்களும் இல்லாதவர்களாய், சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய், வேதாமகங்களை ஓதியுணர்ந்தவர்களாய், நித்தியம், நித்தியாங்கம், நைமித்திகம், நைமித்திகாங்கம், காமியம், காமியாங்கம் என்னும் ஆறு கருமங்களையும் மந்திரம், பாவனை, கிரியை என்னும் மூன்றும் வழுவாவண்ணம் சிரத்தையோடு விதிப்படி செய்ய வல்லவர்களாய் உள்ள சிவாசாரியர்களே பரார்த்தலிங்கபூசை செய்தற்கு அதிகாரிகள். இவர்களல்லாத பிறர் பரார்த்தலிங்கத்தைத் தீண்டினும், அரசனுக்கும் உலகத்துக்கும் கேடுவிளையும்.


பூசகராகிய சிவாசாரியார், கிழக்குநோக்கிய சந்நிதியிலும் தெற்குநோக்கிய சந்நிதியிலும் வலப்பக்கத்தும், மேற்குநோக்கிய சந்நிதியிலும் வடக்குநோக்கிய சந்நிதியிலும் இடப்பக்கத்தும் நின்று பூசை செய்ய வேண்டும்.


மனக்குற்றங்களும் உடற்குற்றங்களும் இல்லாதவர்களாய், சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை என்னும் மூன்றும் பெற்றவர்களாய், சைவாகமங்களையும் சிவபுராணங்களையும் கற்றறிந்தவர்களாய் சிவபத்திமான்களாய் உள்ள சைவர்களே திருக்கோயிலை நடாத்துதற்கு அதிகாரிகளாவர். இம்மைப்பயனாகிய திரவிய முதலியவற்றைக் குறியாது, திருக்கோயிலைச் சிரத்தையோடு விதிப்படி நடாத்துவோர் இம்மையிலே சிவகீர்த்தியைப் பெற்றுப் பின்பு சிவபதத்தை அடைவர். இம்மைப்பயனைக் குறித்து அதிகாரங்களைப் பண்ணிச் சிவத்திரவியங்களைத் திருடுவோரும், முந்தின படித்தரங்களைக் குறைத்தவரும் தண்டிக்கப்படுவர்.


திருக்கோயிலிலே காலந்தோறும் பூசை முதலியவை தவறாமல் விதிப்படி செய்யப்படல் வேண்டும். தவறினால், இராசாவுக்கும் உலகத்தாருக்கும் தீங்குவிளையும்.


சைவசமயிகள் நாடோறும் திருக்கோயிலிற்சென்று, சிரத்தையோடு விதிப்படி சிவதரிசனஞ் செய்து கொண்டு, வீட்டுக்குத் திரும்பல் வேண்டும்.


சிவதரிசனஞ் செய்ய விரும்புவோர் சிவாலயத்துக்குச் சமீபத்தில் உள்ள சிவதீர்த்தத்திலே விதிப்படி ஸ்நானஞ்செய்து, கரையிலேறி, சரீரத்துள்ள ஈரத்தை உலர்ந்த வஸ்திரத்தினாலே துவட்டி, நெற்றியில் வீபூதி தரித்து, குடுமியை முடித்து, ஈரக்கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்தகௌபீனந்தரித்து, கைகளிரண்டையுஞ் சுத்திசெய்து, தோய்த்துலர்ந்தனவாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உள்ள சுத்த வஸ்திரம் இரண்டு அரையிலே தரித்து, அனுட்டானமும் செபமும் முடித்துக் கொண்டு, திருக்கோயிலுக்குப் போகக்கடவர். ஸ்நானம் முதலிய நியமங்கள் இல்லாது திருக்கோயிலுக்குப் போவோர் சிவநிந்தகரை ஒப்பர்.


திருக்கோயிலுக்குப் போகும்பொழுது, ஒருபாத்திரத்திலே தேங்காய் பழம் பாக்கு வெற்றிலை முதலியவை வைத்து, அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக்கொண்டு, திருக்கோயிலுக்குப் போகக்கடவர். சிவபெருமானையும் சிவாக்கினியையும் ஆசாரியரையும் சேவிக்கப்போகுமிடத்து, வெறுங்கையுடனே போகாது, தம்மாலே கொடுத்தற்கியன்ற பதார்த்தத்தை அவர் சந்நிதியிலே வைத்து, வணங்குதலே தகுதி. பொருளில்லாதவன் பத்திரபுட்பங்கள் கொடுத்து வணங்கல் வேண்டும். அதுவுங் கூடாதவன் சந்நிதியில் உள்ள செத்தை முதலியவற்றைப் போக்கி வணங்கல் வேண்டும்.


திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே தூலலிங்கமாகிய கோபுரத்தை வணங்கி, இரண்டுகைகளையும் சிரசிலே குவித்துக் கொண்டு உள்ளே பிரவேசித்து, பத்திரலிங்கமாகிய பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணக்கடவர்.


ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணல்வேண்டும். திரயாங்க நமஸ்காரம் இவ்விருவருக்கும் பொது.


அட்டாங்க நமஸ்காரமாவது: தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டு உறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல். பஞ்சாங்க நமஸ்காரமாவது: தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல். திரயாங்க நஸ்காரமாவது: சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்.


நம்ஸ்காரம், மூன்றுதரமாயினும், ஐந்துதரமாயினும், ஏழுதரமாயினும், ஒன்பதுதரமாயினும், பன்னிரண்டுதரமாயினும் பண்ணல்வேண்டும். ஒருதரம் இருதரம் பண்ணுதல் குற்றம்.


நமஸ்காரம் பண்ணுமிடத்து, மேற்கேயாயினும் தெற்கேயாயினும் கால் நீட்டல் வேண்டும்; கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் கால் நீட்டலாகாது.


கிழக்குநோக்கிய சந்நிதியிலே பலிபீடத்துக்கு அக்கினிமூலையினும், தெற்குநோக்கிய சந்நிதியிலும் மேற்குநோக்கிய சந்நிதியிலும் பலிபீடத்துக்கு நிருதிமூலையினும், வடக்குநோக்கிய சந்நிதியிலே பலிபீடத்துக்கு வாயுமூலையினும் சிரசைவைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச்செய்து நமஸ்காரம் பண்ணக்கடவர்.


பின்பகலிலே சூரியகிரகணமாயினும் சங்கிராந்தியாயினும் வரின், அப்பொழுது தரிசனஞ் செய்யப்போனவர், மேற்கே கால் நீட்டலாகாமையால், தெற்குநோக்கிய சந்நிதியிலும் வடக்குநோக்கிய சந்நிதியிலும் அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணாது, திரயாங்க நமஸ்காரம் மாத்திரம் பண்ணல் வேண்டும்.


மேற்சொல்லியபடி நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, சிவபெருமானைச் சிறிதும் மறவாத சிந்தையோடு செபமாலையைக் கையில் வைத்துப் பஞ்சாக்ஷாசெபம் செய்து கொண்டாயினும், இரண்டுகைகளையும் இருதயத்திலே குவித்துக் கொண்டாயினும், பூரண கர்ப்பிணியானவள் காலிலே விலங்கு பூட்டப்பட்டவளாய் எண்ணெய் நிறைந்த குடத்தைச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு நடத்தல்போல, செந்துக்கள் வருந்துமேயென்று மனம் உருகிப் பூமியைப் பார்த்துக் கொண்டு கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷிணம் பண்ணக்கடவர்.


சிவபெருமானை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பதினைந்து தரமாயினும், இருபத்தொரு தரமாயினும் பிரதிக்ஷணம் பண்ணல் வேண்டும்.


விநாயகரை ஒருதரமும், சூரியனை இரண்டுதரமும், பார்வதிதேவியாரையும் விட்டுணுவையும் நந்நான்கு தரமும் பிரதக்ஷிணம் பண்ணல்வேண்டும்.


பிரதிக்ஷணம் பண்ணும் ஆவரணத்திலே தூபிநிழலேனும் துசத்தம்பநிழலேனும் இருப்பின், அந்நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூற்றினுள்ளே செல்லக்கடவர். கடவுள் உற்சவங் கொண்டருளும் காலத்திலே உடன்செல்லும் பொழுது அந்நிழலிருப்பினும் நீக்காது செல்லலாம்.


அபிஷேககாலத்தில் உட்பிரகாரத்திலே பிரதிக்ஷணம், நமஸ்காரம் முதலானவை பண்ணலாகாது.


பிரமசாரிகள் வலம்வரக் கடவர். கிருகத்தரும் வானப்பிரத்தரும் வலமும் இடமுமாக வரக்கடவர். சந்நியாசிகள் இடம்வரக்கடவர். வலஞ்செய்தலினாலே போகமும், இடஞ்செய்தலினாலே மோக்ஷமும், வலமும் இடமும் செய்தலினாலே போகமோக்ஷமும் உண்டாகும்.


வலமும் இடமுஞ் செய்தல் கர்ப்பக்கிருகத்தில் என்று கயாம்புவத்திலே சொல்லப்பட்டது. கர்ப்பக்கிருகத்துப் பிரதிக்ஷணம் பூசகராகிய சிவப்பிராமணருக்கு மாத்திரம் விதிக்கப்பட்டது. கர்ப்பக்கிருகத்திலே சிவலிங்கச்சாயையையும் நிருமாலியத்தையும் சோமசூத்திரத்தையும் க்டவாது வலமிடஞ்செய்தல் வேண்டும். கர்ப்பக்கிருகத்தில் வலமிடமும், வெளிப்பிரகாரங்களில் வலமும் செய்தல் வேண்டுமென்று காலோத்தரத்தில் விதிக்கப்பட்டது.


தாம் பிரதிக்ஷணம் பண்ணும் ஆவரணத்தில் உள்ள பலிபீடத்தையும் இடபத்தையும் சேர்த்துப் பிரதிக்ஷணம் பண்ணக்கடவர். தாம் பிரதிக்ஷணம் பண்ணும் ஆவரணத்திலே பலிபீடமும் இடபமும் இல்லையாயின் அதற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள பலிபீடத்தையும் இடபத்தையும் சேர்த்துப் பிரதிக்ஷணம் பண்ணக்கடவர். சிவலிங்கத்துக்கும் அந்த அந்த ஆவரணத்தில் உள்ள பலிபீட இடபங்களுக்கும் இடையே போகலாகாது. இப்படிக் காலோத்தராகமத்திலே சொல்லப்பட்டது.


மேற்சொல்லியபடி பிரதிக்ஷணம் பண்ணிச் சந்நிதானத்திலே நமஸ்காரம் செய்து எழுந்து கும்பிட்டு, துவாரபாலகரை வணங்கி, பின்பு கணநாயராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்து, "பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்த அடியேன் உள்ளே புகுந்து சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும்பொருட்டு அனுமதி செய்தருளும்" என்று பிரார்த்தித்துக்கொண்டு உள்ளே போகக்கடவர்.


முன்னே விக்கினேசரருடைய சந்நிதியையடைந்து, இருகைகளையும் குவித்து அவரைத் தரிசித்து மனசிலே தியானித்து, முட்டியாகப்பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மும்முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும் இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு மும்முறை தாழ்ந்தெழுந்து, தோத்திரம் பண்ணக்கடவர்.


பின்பு இருகைகளையுஞ் சிரசிலே குவித்துக்கொண்டு சிவபெருமானுடைய சந்நிதியை அடைந்து, அவரைத் தரிசித்து மனசிலே தியானித்து, சிரசிலும் இருதயத்திலும் அஞ்சலிசெய்து, மனங் கசிந்துருக உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்த அருவி சொரிய, முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்துடனே தோத்திரங்களைச் சொல்லக்கடவர்.


உத்தமோத்தமமாகிய தோத்திரங்கள்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பலாண்டு, பெரிய புராணம் என்னும் ஐந்துமாம்.


சிவபெருமானைப் பூசகரைக்கொண்டு வில்வத்தினாலே அருச்சனை செய்வித்து, விதிப்படி சுத்திசெய்யப்பட்ட பழம் முதலியவற்றை நிவேதிப்பித்து, கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப்பண்ணி, பூசகருக்கு இயன்ற தக்ஷிணை கொடுக்கக்கடவர்.


சிவப்பிராமணர்கள் கர்ப்பக்கிருகத்திலும், பிராமணர்கள் அர்த்தமண்டபத்திலும், ஷத்திரியர் மகாமண்டபத்திலும் புகுந்து சிவமூலமந்திரத்தினாலே புஷ்பாஞ்சலி செய்யக்கடவர். வைசியர் இடபத்துக்கு முன்னும், சூத்திரர் இடபத்துக்குப் பின்னும் கோமயத்தினாலே சதுரச்சிரமாக இடம்பண்ணி, சிவமூலமந்திரத்தினால் அருச்சிக்கக்கடவர். இப்படி அஞ்சுமான் என்னும் ஆகமத்திலே சொல்லப்பட்டது.


பின்பு சபாபதி, தக்ஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையும் சமயாசாரிகள் நால்வரையும் தரிசித்து வணங்கித் துதிக்கக்கடவர்.


அதன்பின் பார்வதிதேவியாருடைய சந்நிதியை அடைந்து, சிரசிலும் இருதயத்திலும் அஞ்சலி செய்து, அவரைத் தரிச்சித்து மனசிலே தியானித்து, அருச்சனை முதலியன செய்வித்து, தோத்திரங்களைச் சொல்லக்கடவர்.


இறுதியில் வீபுதிவாங்கித் தரித்துக்கொண்டு, பிரதிக்ஷணஞ்செய்து சண்டேசுரர் சந்நிதியை அடைந்து வணங்கித் தோத்திரஞ்செய்து, தாளத்திரயம் பண்ணிச் சிவதரிசனபலத்தைத் தரும்பொருட்டுப் பிரார்த்திக்கக் கடவர்.


அதன்பின் நந்திதேவரை அடைந்து வணங்கித் துதித்து, பலிபீடத்துக்கு இப்பால் வந்து மும்முறை நமஸ்கரித்து, எழுந்து வடக்கு நோக்கி இருந்து சிவபெருமானைத் தியானித்துக்கொண்டு, பஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச் செபித்து, எழுந்து வீட்டுக்குப் போகக்கடவர்.


தரிசனஞ்செய்து திரும்பும் பொழுது, சிவபெருமானுக்கும் இடபதேவருக்கும் புறங்காட்டாது, திரும்பல் வேண்டும்.


சிவதரிசனம் பிராதக்காலத்திலே செய்தால் இரவிலே செய்த பாவம் போம்; மத்தியான்னத்திலே செய்தால் பிறந்த நாட்டொடங்கிச் செய்த பாவம் போம்; சாயங்காலத்திலே சய்தால் ஏழுபிறவிகளிற் செய்த பாவம் போம். ஆதலால், சைவசமயிகள் யாவரும் எந்நாளும் காலந்தோறும் தவறாமல் விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யக்கடவர்.


சோமவாரம், அட்டமி, பிரதோஷம், பௌர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரைவிஷு, மாசப்பிறப்பு, சூரியகிராணம், சந்திரகிராணம், சிவராத்திரி முதலிய புண்ணியகாலங்களிலே சிவதரிசனஞ் செய்தல் மிக மேலாகிய சிவபுண்ணியம்.


சிவபெருமானை மனசினாலே தியானித்துக் கொண்டும் பஞ்சாக்ஷரத்தை வாக்கினாலே உச்சரித்துக் கொண்டும் சூரியோதயந் தொடங்கி அத்தமயபரிபந்தமாயினும் ஒருயாமமாயினும் அங்கப்பிரதக்ஷிணஞ் செய்தவர் தீவினைகளெல்லாவற்றினின்றும் நீங்கி முத்தியை அடைவர்.


இடபதேவரைத் தரிசித்து, அங்குநின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்குநின்றும் வலமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து கோமுகையைக் கடவாது முன்சென்ற வழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்குநின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்குநின்றும் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது வலமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து, அங்குநின்றும் திரும்பிவந்து இடபதேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, பின்பு சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து வணங்குதல் சோமசூத்திரப் பிரதிக்ஷணம் எனப் பெயர்பெறும். பிரிந்துவரும் பொழுது ஆன்மப்பிரதக்ஷிணம் பண்ணல்வேண்டும். இப்படி ஒரு பிரதிக்ஷிணஞ் செய்யின், அநந்தமடங்கு பயனுண்டு. இந்தப் பிரதிக்ஷிணம் பிரதோஷ காலத்திலே செய்யின் மிக விசேடமாம்.


சுக்கிலபக்ஷம் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் வருகின்ற திரயோதசித் திதியிலே சூரியாஸ்தமனத்துக்குமுன் மூன்றேமுக்கால் நாழிகையும் பின் மூன்றேமுக்கால் நாழிகையுமாயுள்ள காலமே பிரதோஷம் எனப்படும். விட்டுணு முதலிய தேவர்கள் தாங்கள் திருப்பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷம் தோன்றக் கண்டு அஞ்சி ஓட்டெடுப்ப, அது அவர்களை வலமும் இடமுமாக மறித்துத் தொடர்ந்தது. அவர்கள் திருக்கைலாயத்திற் சென்று, இடபதேவருடைய அண்டத்தில் ஒளித்தார்கள். அவர்களை ஆலாகலவிஷம் பின்றொடர்ந்து வரும்போது சிவபெருமான் இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே இருந்து அவ்விஷத்தைத் திருக்கரத்திலேற்று உட்கொண்டு, அவர்களைக் காத்து, அக்கொம்பினடுவே நின்று நிருத்தஞ் செய்தருளினார். இது சனிவாரத்திலே திரயோதசித் திதியிலே சாயங்காலத்திலே அர்த்தமணடசமயத்திலே நிகழ்ந்தது. ஆதலால் சனிப்பிரதோஷம் மிகச்சிறந்தது. இப் பிரதோஷ வரலாறு வேறொரு பிரகாரமாகவுஞ் சொல்லப்படும். ஏகாதசியின் மாலைக்காலத்திலே சிவபெருமான் ஆலாகலவிஷத்தை உண்டு தேவர்களைக் காத்தருளினார். துவாதசியிலே அமைர்தந்தோன்ற, தேவர்கள் அதை உண்டு, திரயோதசியின் மாலைக்காலத்திலே சிவபெருமானைப் பூசித்து வணங்கினார்கள். அப்பொழுது சிவபெருமான் இடபத்தின்மேனின்று அருள் செய்தார். இப்பிரதோஷத்திலே இடபதேவருடைய அண்டத்தைப் பரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடுகூட ஹர ஹர என்று சொல்லி, சிவலிங்கப் பெருமானைத் தரிசித்தல் வேண்டும்.


பிரதோஷ காலத்திலே மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும், முத்தி சித்திக்கும்.


திருக்கோயிலிலே செய்யத்தகும் சிவபுண்ணியங்களாவன: நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து ஸ்நானஞ் செய்து அனுட்டானம் முடித்துக்கொண்டு வந்து மெல்லிய மார்ச்சனியினாலே கிருமிகள் சாவாமல் மேற்படத் திருவலகிடுதலும், ஈன்றண்ணியதும் நோயினதுமல்லாத பசுவினது சாணியைப் பூமியில் விழுமுன் இலையில் ஏற்றாயினும், அது கூடாதாயிற் சுத்தநிலத்தில் விழுந்த சாணியை மேல் கீழ் தள்ளி நடுப்பட எடுத்தாயினும், வாவி நதி முதலியவற்றில் வடித்தெடுத்துக் கொண்டுவந்த நீரோடு கூட்டித் திருமெழுக்குச் சாத்தலும், திருநந்தவனத்திலே விதிப்படி பூக்களைக் கொய்து பழுது நீக்கித் திருமாலைகட்டிச் சிவபெருமானுக்குச் சாத்துவித்தலும், சிவசந்நிதியிலே தமிழ்வேதத்தைப் பண்ணோடு பாடுதலும், அதனைச் சாரங்கியில் ஏற்றி வாசித்தலும், சிவதோத்திரங்களைச் சொல்லிக் கைகொட்டி ஆனந்தக் கூத்தாடுதலும், சுகந்த தூபம் இடுதலும், திருவிளக்கேற்றுதலும், சிவபுராணங்களை வாசித்துப் பொருள் சொல்லுதலும், அதனைக் கேட்டலும், பிரகாரங்களில் உள்ள புல்லைச் செதுக்குதலும், தங்கள் தங்கள் செல்வத்துக்கு ஏற்பத் திருப்பணியும் பூசையுஞ் செய்வித்தலும், பிறவுமாம்.


திருக்கோயிலிற் செய்யலாகாத குற்றங்களாவன: ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், சனனாசௌச மரணாசௌசத்தோடு போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், அபானவாயு விடுதல், பாக்குவெற்றிலை உண்டல், தம்பல முமிழ்தல், சோசனபானம் பண்ணுதல், நித்திரை செய்தல், க்ஷௌரம் பண்ணுவித்துக் கொள்ளுதல், எண்ணெய் தேய்த்தல், தலைபார்த்தல், மயிர்கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வேட்டி கட்டிக் கொள்ளுதல், தோளிலே உத்தரியம் இட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல், சட்டையிடுதல், வாகனமேறிச் செல்லுதல், குடைபிடித்துக் கொள்ளுதல், தீவர்த்தி பிடித்துக் கொள்ளுதல், உன்னத தானத்திருத்தல், ஆசனத்திருத்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் இடபம் விக்கிரகம் என்னும் இவைகளின் சாயையை மிதித்தல், விக்கிரத்தையும் நிர்மாலியத்தையும் தீண்டுதல், திருவிளக்குச் சாயையிலும் சிவலிங்கச் சாயையிலும் தன்னிழலிடுதல், பெண்களைப் புகழ்தல், பெண்களைத் தீண்டல், பெண்களை இச்சித்துப் பார்த்தல், பெண்களைப் புணர்தல், மேற்கு நோக்கிய சந்நிதியிலும் கிழக்கு நோக்கிய சந்நிதியிலும் இடப்பக்கத்தில் நமஸ்காரமும் செபமும் பண்ணுதல், ஒருதரம் இருதரம் நமஸ்கரித்தல், ஒருதரம் இருதரம் வலம் வருதல், ஓடி வலம்வருதல், சிவபெருமானுக்கும் இடபதேவருக்கும் குறுக்கே போதல், அவர்களுக்குப் புறங்காட்டுதல், ஒருகை குவித்தல், அகாலத்திலே தரிசித்தல், சிவபெருமானுக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல், வீண் பேசுதல், அசப்பியம் பேசுதல், அசப்பியங் கேட்டல், சிரித்தல், வீண்கீதம் பாடல், வீண்கீதங் கேட்டல், தேவத்திரவியத்தை இச்சித்தல், கீழ்மக்களைப் புகழ்தல், மேன்மக்களை இகழ்தல், துர்த்தேவதைகளை வழிபடுதல், சிவபெருமானை முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் இடப்பக்கத்தும் நின்று வணங்குதல், திருவிளக்கவியக் கண்டும் தூண்டாதொழிதல், திருவிளக்கில்லாதபொழுது வணங்குதல், உற்சவங் கொண்டருளும்போது அங்கேயன்றி உள்ளே போய் வணங்குதல், குரவர் முதலியோரை வணங்குதல் முதலியனவாம். சிவதீர்த்தம் திருநந்தவனம் திருமடம் என்னு மிவைகளிலும் மலசலங் கழித்தல், எச்சிலுமிழ்தல், மூக்குநீர்சிந்துதல், புணர்ச்சி முதலிய அசுசிகளைச் செய்யலாகாது. இக்குற்றங்களுள் ஒன்றை அறியாது செய்தவர் உருத்திரஞ் செபிக்கின், அக்குற்றம் நீங்கும். உருத்திரத்துக்கு உரியரல்லாதவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின், அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவர்; அவருக்குப் பிராயச்சித்தம் இல்லை.


தூரத்திலிருந்து சிவஸ்தல யாத்திரை செய்ய விரும்பினோர், சுபதினத்திலே ஸ்நானஞ் செய்து, நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு, கல்வியறிவொழுக்கங்களாற் சிறந்த சற்பிராமணர் முன்னே கையிலே பவித்திரஞ்சேர்த்தி, 'சிவக்ஷேத்திரயாத்திரை செய்யக்கடவேன்' என சங்கற்பஞ்செய்து, சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, தருமநெறியான் வந்த பொருளைக் கைக்கொண்டு, வீட்டினின்றும் புறப்பட்டு, காமம் குரோதம் முதலிய தீக்குணங்கள் எல்லாவற்றையும் முற்றக் கடிந்து, பரான்னம் புசித்தலும் பிறர்கைப்பொருளை வாங்குதலும் இல்லாது, நாடோறும் பஞ்சாக்ஷரசெபம் சிவபூசை தேவார பாராயணம் சிவதரிசனம் சிவபுராணசிரவணம் மாகேசுரபூசை முதலியவற்றைச் செய்துகொண்டு செல்லக் கடவர். இப்படிச் சென்று, தாங்குறித்த சிவஸ்தலத்தை அடைந்து, தூரத்தே கோபுரத்தை நமஸ்கரித்து, எழுந்து சென்று, அத்தினத்திலே உணவொழித்து, க்ஷௌரம் பண்ணுவித்துக் கொண்டு, விதிப்படி ஸ்நானஞ்செய்து, பிண்டப்பிரதானம் பண்ணி, உத்தமபாத்திரமாகிய பிராமணருக்குத் தம்மாலியன்ற திரவியங்கள் கொடுத்து, வணங்கக் கடவர்.


தானம் வாங்குதற்கு உரிய உத்தம பாத்திரமாவார்: வேதாமகங்களையும் சிவபுராணங்களையும் ஓதி உணர்ந்தவர்களாய், பாவங்களை முற்றக் கடிந்தவர்களாய், சந்தியாவந்தனம் சிவபூசை முதலிய கருமங்களைத் தவறாமல் விதிப்படி சிரத்தையோடு செய்பவர்களாய் இல்லறத்தில் வாழ்பவர்களாய், வறியவர்களாய் உள்ள பிராமணர்கள். இவர்களல்லாத பிறருக்குத் தானஞ் செய்தவர் பத்துப்பிறப்பு ஒந்தியாயும், மூன்று பிறப்புக் கழுதையாயும், இரண்டு பிறப்புத் தவளையாயும், ஒரு பிறப்பு சண்டாளராயும், பின் சூத்திரராயும், வைசியராயும், அரசராயும், பிராமணராயும் பிறந்து வறுமையினாலும் நோயினாலும் வருந்தி உழலுவர். ஆதலா, உத்தமபாத்திரராகிய பிராமணருக்கே தானஞ்செய்தல் வேண்டும். அத்தலத்தில் உத்தமர் இல்லையாயின், தம்மாலியன்ற பொருளை, வேறு தலத்துள்ள உத்தமரைச் சுட்டிச் சங்கற்பித்து, உதகங் கொடுத்து, அவரிடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்தல்வேண்டும். அவர் இறந்தாராயின், அவர் புத்திரருக்குக் கொடுத்தல் வேண்டும். அவரும் இறந்தாராயின் சிவபெருமானுக்குக் கொடுத்தல் வேண்டும்.


மூன்றுநாளாயினும், ஐந்துநாளாயினும், பதினைந்து நாளாயினும், ஒருமாசமாயினும், ஒருவருடமாயினும், அந்தத் தலத்திலே நாடோறும் சிவதீர்த்தத்திலே ஸ்நானம் பண்ணி, சிவபூசையும் சிவாலயதரிசனமும் இயன்ற மட்டும் மாகேசுரபூசையும் செய்துகொண்டும், சைவ நூல்களை ஆராய்ந்து கொண்டும் வசிக்கக் கடவர். பொருளில்லாதவர் சிவனடியார்களுக்கு ஒருமுட்டி பிச்சையாயினும் கொடுத்துண்ணக்கடவர். தாங்குறித்த நாளெல்லை கடந்தபின், சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, திருக்கோயில் புறத்துவந்து, கோபுரத்தை நமஸ்கரித்துச் சென்று, திருவெல்லையை நமஸ்கரித்து, முன்சொன்ன நியமத்துடனே தம்மூரை அடைந்து, பிராமண போசனமும் மாகேசுரபூசையும் செய்யக்கடவர்.


பெறுதற்கரிய மனிதப்பிறப்பை உடையவர்களாய், மெய்ந்நூல்களாகிய வேதாமகங்கள் வழங்கும் புண்ணிய பூமியாகிய இப்பரதகண்டத்திலே தவஞ்செய் சாதியிலே சைவமரபிலே பிறந்தும், அனேகர் இவைகளின் அருமையைச் சிறிதும் சிந்தியாதும், கருணாநிதியாகிய சிவபெருமானுடைய மகிமையையும், புண்ணியபாவங்களையும் அவைகளின் பலங்களையும் கற்றாயினும் கேட்டாயினும் அறியாதும், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்யாதும், தமது வாழ்நாளை வீணாகக் கழித்து, எரிவாய்நரகத்துக்கு இரையாகுகின்றார்கள். சிலர் ஒரோ வழிச் சிவ புண்ணியங்களைச் செய்யப்புகுந்தும், அவைகளைச் செய்யும் முறைமைகளைச் சிறிதும் அறியாமல், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளுதல் போல, பாவத்தையே ஈட்டிக் கொள்ளுகிறார்கள். இப்படிக் கெட்டுப் போகாது, நமது சைவசமயிகள் இம் மனிதப்பிறப்புப் பெறுதற்கரியதென்பதையும், இது நீங்கும் அவதி அறிவதற்கரியதென்பதையுஞ் சிந்தித்து, இந்தப் பிரபந்தத்தை வாசித்தறிந்து, பாவங்களை வெறுத்து, சிவபெருமானுடைய திருவடிகளைத் தங்கள் மனம் வாக்குக் காயங்களினாலே விதிப்படி மெய்யன்போடு வழிபட்டு, நித்தியமாகிய பேரின்பத்தை பெற்றுய்யக் கடவர்கள்.


பிரமோத்தரகாண்டம்


கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்
கறைக்கண்டன் கோயில்புகும் கால்களே கால்கள்
பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே தலைகள்
பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள்
பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னாப்
பரன்சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள்
அண்ணல்பொலங் கழனினைக்கு நெஞ்சமே நெஞ்சம்
அவனடிக்கீ ழடிமைபுகு மடிமையே யடிமை.

திருத்தாண்டகம்

நிலைபெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதீ யென்றும்
ஆரூரா வென்றென்றே யலறா நில்லே.


திருச்சிற்றம்பலம்

மெய்கண்டதேசிகன் றிருவடி வாழ்க.

Saturday, January 2, 2010

ம்ருத்யுஞ்ஜாய மந்திரம் (MRUTHUNJAYA MANTHIRAM)


மரண பயத்தை நீக்கும் மந்திரம்: ம்ருத்யுஞ்ஜாய மந்திரம்

தற்போதைய இயந்திர கதியான வாழ்வில் எல்லாவற்றிலும் வேகம்! சில நேரம் விவேகமில்லாத வேகம் விபத்தில் முடிந்துவிடுகின்றது. வெளியில் சென்றவர் வீடு திரும்புவார் என்பது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. மரண பயத்தைப் போக்கும் சக்தி சிவனுக்கு உண்டு.

கீழ்க்காணும் மந்திரத்தை தினசரி சொல்வதன்/ஜபிப்பதன் மூலமாக மரண பயத்தை வெல்லலாம்.

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய
மகாதேவாதே நமக

(விளக்கம்:மரணத்தை வென்றவரே! ருத்ரனே! விஷத்தை உண்டும், மரணத்தை அண்டவிடாதவரே, அம்ருதத்தை உடையவரே! சர்வமும் ஆனவரே! மகாதேவனே உன்னை வணங்குகிறேன்)

ஆத்திசூடி - ஆசிரியர்: ஒளவையார்


 
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

 
உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண்ணெழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்பூரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அ·கம் சுருக்கேல்
உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல் லேல்
15. ஙப்போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையிற் கல்
30. அறனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்
ககர வருக்கம்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கெளவை அகற்றுசகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்
தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. து¡க்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்
நகர வருக்கம்
66. நன்மை கடைப் பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நு¡ல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடங் கொடேல்
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. ப 82. பூமி திருந்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் பூரியேல்
மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடங் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீது¡ண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொற் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அறமொழி
98. மோகத்தை முனி
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடுபெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

Friday, January 1, 2010

சித்தர்கள் மரபு

சித்தர்கள் மரபு

சித்தர்கள் பதினெட்டு என்கிறது பண்டைய நூல்கள். அவர்கள் கும்பமுனி, நந்திமுனி, கோரக்கர், புலிப்பாணி, புசுண்ட ரிஷி, திருமூலர், தேரையர், யூகிமுனி, மச்சமுனி, புன்னாக்கீசர், இடைக்காடர், பூனைக்கண்ணர், சிவவாக்யர், சண்டிகேசர், உரோமரிஷி, சட்டநாதர், காலங்கிநாதர், போகர் என்று கருவூரார் எழுதிய "அட்டமாசித்து" என்ற நூல் கூறுகிறது.


வேறொரு நூலான நிஜானந்த போதத்தில் பதினெட்டு சித்தர்களின் பெயர்கள் வேறுபடுகிறது அவர்கள்: அகத்தியர், போகர், நந்தீசர், புண்ணாக்கீசர், கருவூரார், சுந்தரானந்தர், ஆனந்தர், கொங்கணர், பிரம்மமுனி, உரோம முனி, வாசமுனி, அமலமுனி கமலமுனி, கோரக்கர், சட்டைமுனி, இடைக்காடர், பிரம்ம முனி போன்றவர்கள் ஆவார்.


இந்த சித்தர்களின் காலத்தை மிகச் சரியாக வரையறுக்க முடியவில்லை. கி. பி. 14-17 ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட கால அளவுகள் பலவற்றை தமிழ் சான்றோர்கள் குறிக்கின்றனர். அகத்தியருக்குப் பிறகு திருமூலர், திருமூலருக்குப் பிறகு மற்றையோர் என சித்தர் மரபு அறியப்படுகிறது.

ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும் சித்தர்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் அனேக நூல்கள் செய்துள்ளனர்.


சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய் போற்றி வணங்கப்பட்டனர். சித்தர் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது சமணர்கள். பிறகே, மற்றவர்கள் கைக்கொண்டனர்.

புத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திரயனத்தின் பிறப்பிடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீபர்வதம். சித்தர்கள் பலரும் ஸ்ரீ பர்வதத் தொடர்பு கொண்டிருந்தனர். புத்த மத சித்தர்கள் 6-12ஆம் நூற்றாண்டுகளில் வாழ்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சித்தர்கள் பல்வேறு குளத்தில் பிறந்தவர்கலாயினும் (அரசர், வணிகர், அந்தணர், கருமார், இன்ன பிற) சித்தர் என்ற தனியொரு மரபுக்கு உரியவராயினர்.


அட்டமா சித்தி

அட்டமா சித்தி என்றால் என்ன?


அட்டமா சித்தி எட்டு வகையான அபுர்வ சக்திகளை சித்தர்கள் தங்களது தவ வலிமையாலும் இறைவனின் அருளாலும் பெறப் பட்டதே அட்டமா சித்தி எனப்படும். எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் வருமாறு:

1. அணிமா - உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்.
2. மகிமா - உடலை புதாகாரமாகத் தோன்றச் செய்தல்.
3. கரிமா - உடலை யானையைப் போன்று கனமாக்குதல்.
4. லகுமா - உடலை தக்கையைப் போல் இலேசாக்குதல்.
5. பிராப்தி - தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்.
6. பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்.
7. ஈசத்துவம் - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்.
8. வசித்துவம் - தெய்வங்களைத் தன் வயப்படுத்துதல்.
மேற் கொடுக்கப் பட்டுள்ள எட்டு விதமான அபூர்வ சக்திகளைக் கொண்டு சித்தர்கள் நம்பமுடியாத பல அதிசயங்களை செய்தனர். இன்றும் நம்மோடு வாழ்ந்து வரும் பல சித்தர்கள் சூட்சுமான வாழ்க்கையோடு வாழ்கிறார்கள்.

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர் யார்?

சித்தம் என்பது புத்தி மனம்.
சித்து - புத்தியால் ஆகிற காரியம்.
சித்தர் - புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.
சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டப்படுத்துவார்கள். சித்தர்களை ஆன்மீகப் புரட்சியாளர்கள் என்று சொல்வதும் உண்டு.

"சித்தர்" என்பவர் பரத்தோடு சேர்ந்தவர்கள் பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்கள். அணிமா சித்திகளை (அஷ்டமா சித்திகள்) எட்டையும் அடைந்தவனே சித்தன் ஆவான். சித்தர்கள் தங்கள் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு தங்கள் உடலுடன் இருக்கும் பொழுதே இறைவனுடன் கலந்து விடுவார்கள். நினைவு செயல் என்பவற்றைத் துறந்து சிவனோடு ஒன்றாக கலந்து விடுவார்கள்.

கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். காலத்திற்கு உட்பட்டவர்கள் பக்தர்கள். காலத்தை வென்றவர்கள் சித்தர்கள்.
உடலையும் உயிரையும் பக்தர்கள் பாரமாகக் கருதுபவர்கள். ஆனால் சித்தர்கள் அவைகளை நலம் செய்யும் கருவிகளாகக் கண்டவர்கள் சித்தர்கள். 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் தேரவும் மாட்டார்" என்ற திருமூலர் பாடல் சித்தர்களின் அணுகுமுறையை தெளிவு படுத்தும்.

சித்தர்கள் இமயம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரனை, தியானம் சமாதி, ஆகிய அட்ட யோக யோக வழிகளில் சிறிதும் வழுவாது வாழ்ந்து, உணவையும் உடல் இயக்கத்தையம் குறைத்து, வாசி என்ற மூச்சினை அடக்கி, நாடிகளை துய்மையாக்கி, அவைகளின் மூலம் சரீரத்தில் உள்ள ஓவ்வோர் உயிர் அணுவையும் துய்மையாக்கி, பிறகு மனன வழிபாட்டால் அணுவியக்கம் முற்றி ஒளிவடிவம் என்னும் தெய்வ வடிவம் வளர்ந்து வரும் பொழுது பொருள்களின் பொய்த் தோற்றமும் உண்மை இயல்பும் மாறி மாறித் தோன்றி முடிவில் தோற்ற மாயை மறைந்து உண்மை இயல்புமட்டும் நிலைத்துத் தோன்ற உடலை ஞான ஒளிமயமாக்கி நாத தத்துவத்தோடு இணைத்து சாவை வென்று சதாசிவமாக வாழ்வதே சித்தர்களின் வாழ்வு முறையாகும்

---------------------------------------------------------------------------------------